top of page

மீன்களை வளர்ப்பது எப்படி ?

 

தூய்மை காத்தல்

 

மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருப்பது இன்றியமையாதது.

 தொட்டியில் உள்ள தண்ணீர், நீர் தேங்கிய இடங்கள், வடிகட்டிகள், சரளைக்கற்கள், அலங்கார செடி கொடிகள், பாசி படிந்த தொட்டி சுவர்கள் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்வதினால் மீன்கள் ஆரோக்கியத்துடன் வாழும் நிலை உருவாகும். 

 

முக்கியமாக மீன் தொட்டியை சுத்தம் செய்வதற்கு எண்ணெய், சோப்பு, வேறு விதமான ரசாயன சலவை பொருள் போன்றவற்றை கண்டிப்பாக உபயோகப் படுத்துதல் கூடாது. இதனால் மீன்கள் இறந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

 

மீன் தொட்டியில் இருந்து நீக்கிய அழுக்கு நீரை கீழே கொட்டி விரயம் ஆக்காதீர்கள். உங்கள் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு இந்த நீர் ஒரு பயனுள்ள உரம் ஆகும்.

 

அளவான_உணவு

 

மீன்கள் உணவு உண்பது, ஆற்றல் தேவை என்பதற்காக மட்டுமே. ஆதலால், மீன்களை தேவைக்கு அதிகமாக ஊட்டினால் மந்த நிலை அடைந்து நாளடைவில் இறந்து போகும். 

 

அடிக்கடி விளையாட்டாக உணவை தொட்டியில் கொட்டாமல், தினம் ஒரு முறை குறிப்பிட்ட நேரத்தில் உணவளிக்க வேண்டும். 

 

 நாம் வகை வகையாக விரும்பி உண்ணுவதை போல், மீன்களுக்கும் வெவ்வேறு சுவைகளில் கிடைக்கும் உணவுகளை அளிக்க வேண்டும். வாரத்தில் ஐந்து நாள் உலர்ந்த வகை உணவுகளையும், ஒரு நாள் குளிரேற்றிய (அ) உயிருணவையும் கொடுத்து, மீதம் உள்ள ஒரு நாள் உணவே இல்லாமல் பட்டினி கூட போடலாம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். 

 

மீன் தொட்டியில் உணவை இடும் போது மீன்கள் துள்ளி வந்து உற்சாகமாக சாப்பிட்டால், அவை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக பொருள்.    

 

மீன் இனத்தை தேர்வு செய்தல்

 

சரியான மீன் இனத்தை தேர்வு செய்து வளர்ப்பது ஒரு பெரிய சவால் ஆகும். எந்த மீன் இனம் தனித்து வாழும்? எவை கூட்டத்தோடு வாழும்? எந்த இனம் வேறு இனத்தோடு சேரும் என்ற விவரங்களை எல்லாம் சேகரித்து ஆலோசித்து மீன் வாங்கி வளர்த்தால் தான், அவை ஆரோக்கியமாக சந்தோஷமாக நீண்ட நாள் வாழும். 

 

 இட பற்றாக்குறை ஏற்படாத வகையில் கணிசமான தொகையில் மீன் வளர்க்க வேண்டும். 

 

தொட்டியில், மேல்தளம், நடுத்தளம், கீழ்தளம் என்று இடம் பிரித்து அங்கு வாழும் வகை மீன்களை இனம் கண்டு வளர்க்க வேண்டும். 

 

நடுத்தளத்தில் வாழும் மீன்கள் கூட்டமாக வாழ விரும்பும். கீழ்த்தளத்தில் வாழும் மீன்கள் பெரும்பாலும் சண்டை மனப்பாங்கு உடையவை. ஆகையால் அவற்றை குறைவான எண்ணிக்கையில் வாங்கி, மற்ற மீன்களை தொந்தரவு செய்யதவாறு கண்காணிக்க வேண்டும். 

 

செடிகளால் காற்றூட்டம்

 

மீன் தொட்டியானது, மீன்கள் வாழ்வதற்கு தேவையான பிராணவாயுவை உருவாக்கும் ஒரு சிறந்த இடமாக அமைய வேண்டும். சிறு செடிகள் மீன்களுக்கு புகலிடம் தருவதோடல்லாமல், மீன் தொட்டியின் அழகை எடுத்து காட்டுவதுடன், மீன்களுக்கு தவணை முறையில் பிராணவாயுவை கொடுக்கிறது. 

மீன் தொட்டியில் சேரும் அழுக்கை குறைக்க உதவுகிறது. 

 

அது மட்டுமல்லாமல், இலைகளில் படியும் சில வகை பாசிகளை மீன்கள் விரும்பி உண்ணும். 

 

ஆனால், உயிரோட்டமுள்ள செடி கொடிகளை வைத்து பராமரிப்பது எளிதல்ல. அதற்கு முக்கியமாக பிரகாசமான வெளிச்சமும், நல்ல கரிவளி (Carbon Di-Oxide) மட்டமும் தேவை.

 

கழிவுகளை_அப்புறப்படுதல்

 

 மீன்களுக்கு வழங்கும் நறுக்கிய கீரை, முட்டைகொஸ், வெள்ளரிக்காய் போன்ற உயிருணவுகளின் மிச்சங்களை ஒரு மணி நேரத்திற்குள் அப்புறபடுத்த வேண்டும். 

 

உயிரோட்டமுள்ள செடிகள் சில காரணிகளால் அழுகும் தன்மை உடையவை. உதிர்ந்த இலை தழைகளை அழுக விடாமல் உடனடியாக அப்புறபடுத்துவது புத்திசாலித்தனம். 

 

பச்சை நிற பாசி ஆரோக்கியமானது. ஆனால் பழுப்பு நிற பாசி சேர்வது, மீன் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை குறிக்கும். 

 

முக்கியமாக, நீங்கள் காதலிக்கும் உங்கள் அன்பு மீன் இறந்து விட்டால், சிறுதும் யோசிக்காமல், உடனடியாக தொட்டியை விட்டு நீக்கி விட வேண்டும். இவ்வளவு நாள் உங்கள் நண்பனாக இருந்தமைக்கு ஒரு மனப்பூர்வமான நன்றியை உதிர்த்துவிட்டு, அதை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். ஏனென்றால், மீன்கள் இறந்த உடனேயே அழுக ஆரம்பிக்கும். இதனால், தொட்டியில் இருக்கும் மற்ற சிறு மீன்கள் பாதிப்படையும்.

© 2019 by Name of Site. Proudly created with Wix.com

bottom of page